Saturday, November 27, 2010

திருமணம்



வயது ஏற ஏற, சோம்பேறித்தனம் ஏறிக்கொண்டே போகின்றது.
வெட்டியாக இருந்தாலும் ஏதேனும் எழுதத் தோன்றுவதில்லை.
அதனால் தான் ஒவ்வொரு பதிவிற்கும் இடையே நீண்ட இடைவெளி.


சென்ற வாரம் என் தோழியின் திருமணத்திற்கு சென்றிருந்தேன். சில தவிர்க்க முடியாத காரணங்களால், விடுப்பு எடுக்காமல் சமாளித்தாக வேண்டிய கட்டாயம்.

எனவே அலுவலகம் சென்று, பாதி வேலை முடித்து, மீதியை சரிகட்ட ஆள் பிடித்து,அடித்து பிடித்து, விமானம் பிடிக்க ஓடினேன்.

இந்தியாவில் இருந்தால் முடிந்தளவு நண்பர்களின் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்.


டில்லி, பெங்களூரூ, சென்னை யை சேர்ந்த மூன்று நண்பர்கள்
நாங்கள் கோவையில் சந்தித்தோம்.

அங்கிருந்து உடுமலைக்கு காரில் செல்வதென ஏற்பாடு. கோவையில் இரவு உணவு முடித்து விட்டுக் கிளம்பினோம்.

வாங்கண்ணா, போங்கண்ணா என கோவைத் தமிழில் தான் என்ன சுகம்.

வழி முழுக்க சொந்தக் கதை, சோகக் கதை (வேறென்ன, அவரவர் பணிச் சுமைகள் தான்), சினிமா, அரசியல் என அடி கிளப்பினோம்.மிக இனிமையான பயணம்.


மந்தை ஆடுகள் தான் பிரிந்து சேரும் போது பேச முடிவதில்லை. நாங்கள் அப்படியள்ள.
சில நண்பர்களுடன் சேர்ந்தால் இரவு நீளாதா எனும்படி பேசிக்கொண்டே இருப்போம்.

வழக்கம் போல் மண்டபத்தில் தோழியை கிண்டலடித்து, சில பல திட்டுகளை வாங்கிக் கொண்டு உறங்கச் சென்றோம்.

என் நண்பர்கள் அதிகாலையில் எழுந்து, முகூர்த்தத்திற்கு முன்னரே சென்ற அதிசயம் நடந்தது. அதற்கான அவசியமும் இருந்தது. ஏனெனில் இவ்வளவு தூரம் வந்து முகூர்த்தத்திற்கு தாமதமாக வருவதில் அர்த்தம் இருக்காது;  தோழியிடம் திட்டு வாங்க முடியாது;  திரும்பவும் அடித்து பிடித்து மூவரும் விமானம் பிடித்து டில்லி, பெங்களூரூ, சென்னை செல்ல வேண்டும் - அலுவலக, குடும்ப நிர்பந்தங்கள்.

முகூர்த்தத்திற்கு முன்னரே சென்று, திருமணத்தைக் கண்ணாறக் கண்டு, வயிறாற உண்டு,
திரும்பவும் கோவை வந்து ஆளுக்கொரு திசையில் பறந்தோம்.


அட ஆயிரம் சொல்லுங்கள், நண்பர்களின் திருமணத்தில் கலந்து கொள்வதில் உள்ள இன்பம் வேறெதிலும் இருப்பதில்லை; அங்கு அனைத்து நண்பர்களும் வந்தால் கொண்டாட்டங்கள் அளவில்லை.

இந்த முறை எதிர்பார்த்த நண்பர்கள் பலர் வராததால் கொண்டாட்டங்கள் குறைவு என்றாலும்,  தோழியின் திருமணத்தில் கலந்து கொண்ட மனநிறைவு முழுமையாய் இருந்தது - ஏனெனில்

சில ஆண்டுகள் முன் மற்றொரு தோழியின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத போது ஏற்பட்ட மனச்சுமை இன்னும் ஓர் ஓரத்தில் இருக்கிறது.


என்னைப் பொறுத்தவரை, நண்பர்களின் சுற்றுலாக்கள், இதர விழாக்களில் கலந்து கொள்ள முடியாதது காயம் - உள்ளாறும்;

நண்பர்களின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாதது வடு - ஆறாது!


உள்ளூரில் வேலை செய்த நம் முந்தைய தலைமுறை குறைவாய் வருவாய் ஈட்டினாலும் பற்பல நண்பர், உறவினர்களை பெருக்கிக் கொண்டே சென்றது;

உலக மயமான நமது தலைமுறை வருவாயை பெருக்கிக் கொண்டே சென்றாலும்,    இருக்கும் நண்பர், உறவினர்களை ஈட்டியால் குத்த வேண்டிய கட்டாயத்தில் செல்கின்றது, தனக்குத் தெரியாமலேயே !!


~ ப்ரியமுடன்,

பாலா

3 comments:

  1. Read it once more ...

    உலக மயமான நமது தலைமுறை வருவாயை பெருக்கிக் கொண்டே சென்றாலும், இருக்கும் நண்பர், உறவினர்களை ஈட்டியால் குத்த வேண்டிய கட்டாயத்தில் செல்கின்றது, தனக்குத் தெரியாமலேயே !!

    -- Almost for everyone :-(

    ReplyDelete